பி.இ. கலந்தாய்வு சான்றிதழ் சரிபார்ப்பு: 49 ஆயிரம் பேர் புறக்கணிப்பு: 28-இல் தரவரிசைப் பட்டியல்

0
95

பி.இ. கலந்தாய்வில் பங்கேற்க ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு செய்தவர்களில், 49 ஆயிரம் பேர் அசல் சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்திருப்பது தெரியவந்திருக்கிறது.

இதன் காரணமாக, இந்த முறை பி.இ. கலந்தாய்வில் ஒரு லட்சம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்பது உறுதியாகியிருக்கிறது.
அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களுக்கான ஆன்-லைன் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஜூலை இரண்டாம் வாரத்தில் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்க மொத்தம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ, மாணவிகள் ஆன்-லைனில் விண்ணப்பப்பித்து பதிவு செய்திருந்தனர்.
இவர்களுக்கான சமவாய்ப்பு எண் கடந்த 5 ஆம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பப் பதிவு செய்தவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு, தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 42 உதவி மையங்களில் ஜூன் 8-ஆம் தேதி தொடங்கி 14 -ஆம் தேதி வரை நடைபெற்றது. சென்னை மையத்தில் மட்டும் மூன்று நாள்கள் கூடுதலாக ஜூன் 17 ஆம் தேதி வரை அசல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.

இந்த அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்கள் மட்டுமே, ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். இந்த நிலையில், விண்ணப்பப் பதிவு செய்தவர்களில் 49,781 பேர் அசல் சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்திருப்பது தெரியவந்திருக்கிறது.
இதுகுறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியது:
தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 42 உதவி மையங்களில் நடத்தப்பட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்பவர்கள் மட்டுமே கலந்தாய்வில் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, விண்ணப்பப் பதிவு செய்த 1,59,631 பேரில் 1,09,850 பேர் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றனர். 49,781 மாணவ, மாணவிகள் பங்கேற்கவில்லை. பங்கேற்காதவர்கள், மருத்துவம் அல்லது கலை-அறிவியல் பட்டப் படிப்புகளில் சேர்ந்திருக்க வாய்ப்பு உள்ளது.

மேலும், பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வு தேதி வருகிற 28 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றார் அவர்.

ஜூன் 28 இல் தரவரிசைப் பட்டியல்: விண்ணப்பித்தவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவுபெற்றுவிட்ட நிலையில், அவர்களின் பிளஸ்-2 மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் நிறைவடைய 5 நாள்களுக்கு மேல் ஆகும் என்பதால், பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வு தேதியை வரும் 28 ஆம் தேதி அறிவிக்க உயர் கல்வித் துறை அதிகாரிகளும், பல்கலைக்கழக அதிகாரிகளும் திட்டமிட்டுள்ளனர். அன்றைய தினமே தகுதியுள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்படும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here