பி.எட். மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் தொடக்கம்: முதல் நாளில் 1,400 பேர் பெற்றனர்

0
130

பி.எட். மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், தமிழகம் முழுவதும் முதல் நாளில் 1,400 பேர் விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஜூலை 3 கடைசித் தேதியாகும்.

தமிழகத்தில் உள்ள 13 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள 1, 753 பி.எட். இடங்களில் 2018-19-ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை சென்னையில் உள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்துகிறது. ஆகஸ்ட் மாதத்தில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இதற்கான விண்ணப்ப விநியோகம் சென்னை சைதாப்பேட்டை கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், காமராஜர் சாலையில் அமைந்துள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் உள்பட தமிழகம் முழுவதும் 13 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் வியாழக்கிழமை தொடங்கியது. ஜூன் 30-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை செயலர், தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை 2018-19, விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5” என்ற முகவரிக்கு ஜூலை 3-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த நிலையில், விண்ணப்ப விநியோகம் தொடங்கிய முதல் நாளான வியாழக்கிழமையன்று தமிழகம் முழுவதும் 1400 பேர் விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றுள்ளதாக தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கைச் செயலர் கலைச்செல்வன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here