பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு!

0
171

பொறியியல் படிப்புகளில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 25ஆம் தேதி தொடங்கும் முதல் சுற்று கலந்தாய்வுக்கு இன்று முதல் கட்டணம் செலுத்தலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டுமென அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு நீட் தேர்வு முடிவு வெளியானதில் காலதாமதம் ஏற்பட்டதால் மருத்துவ கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டு, அதன்பிறகு பொறியியல் படிப்புக்கான பிஇ கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரம் வரை நடத்தப்பட்டது.

ஆனால், இந்த ஆண்டு நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர் களுக்கு 196 மதிப்பெண்களை கருணை அடிப்படையில் வழங்கி, அந்த மதிப்பெண்ணை சேர்த்து அதன்பிறகு தரவரிசைப் பட்டியலை வெளியிட வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த ஜூலை 10-ம் தேதி உத்தரவிட்டது. இதனால் மருத்துவ கலந்தாய்வு பாதியில் நிறுத்தப்பட்டது. உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடை விதித்தது.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் மருத்துவ கலந்தாய்வு தள்ளிப்போனதால் பொறியல் படிப்புக்கான கலந்தாய்வை ஜூலைக்குள் முடிக்க முடியாத சூழல் இந்த ஆண்டும் ஏற்பட்டது. இந்நிலையில் கலந்தாய்வை நடத்தி முடிக்க கூடுதல் அவகாசம் கோரி அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பரிசீலித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை வரும் ஆக.31ம் தேதி வரை நடத்திக்கொள்ள அனுமதியளித்து நேற்று உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து, பொறியியல் படிப்புகளில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டது. ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 19 வரை 5 சுற்றுகளாக பொறியியல் கலந்தாய்வு நடைபெறுகிறது.

ஜூலை 25ஆம் தேதி தொடங்கும் முதல் சுற்று கலந்தாய்வுக்கு இன்று முதல் கட்டணம் செலுத்தலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here